சிட்னி, ஏப்ரல்.07-
சிட்னி சென்ற விமானத்தில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும், பணியாளர் ஒருவரைத் தாக்கியதாகவும் 46 வயதான ஜோர்டானியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய காவல்துறையை மேற்கோள்காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) அதனைத் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து சென்ற விமானத்தின் பின்பக்க அவசரக் கதவை அவர் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் மீண்டும் தனது இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அந்நபர் மற்றோர் அவசர கதவைத் திறக்க முயன்றுள்ளார்.
அந்த நபர் பின்னர் பணியாளர்கள் மற்றும் பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டார். அச்சமயத்தில் அவர் ஒரு விமான ஊழியரைத் தாக்கியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாடவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.