புதுடெல்லி, ஏப்ரல்.07-
நிலநடுக்கத்தால் கடும் சேதத்தைச் சந்தித்துள்ள மியான்மாருக்கு இந்தியா மேலும் 31 டன் நிவாரணப் பொருட்களை விமானம் வாயிலாக அனுப்பி வைத்துள்ளது. மியான்மார் மற்றும் தாய்லாந்தை, கடந்த 28ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. அதில் மியான்மர் மோசமான பாதிப்பைச் சந்தித்தது. 3, 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மியான்மாருக்கு உதவ இந்தியா, ‘ஆப்பரேஷன் பிரம்மா’ பணியைத் தொடங்கியது. மியன்மாரில் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலேவில் நிலநடுக்கத்தால் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய ராணுவம் மிகப் பெரிய தற்காலிக மருத்துவமனையை அமைத்துத் தந்துள்ளது. அங்கு இந்திய மருத்துவர்கள், தாதியர் உட்பட 118 பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் இந்தியா விமானம் வாயிலாக மேலும் 31 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்துள்ளது. இதற்கு முன் அரிசி உட்பட 440 டன் நிவாரணப் பொருட்கள், மியான்மாருக்கு அனுப்பப்பட்டது.