ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.07-
பினாங்கு மாநிலத்தில் 5 மாவட்டங்களிலும் இந்துக்கள் ஈமக்கிரி சடங்கு செய்வதற்கானக் கூடங்கள் கட்டப்படுவதற்குத் தாம் உறுதி பூண்டிருப்பதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்துள்ளார்.
பினாங்கில் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தாம் பொறுப்பேற்றிருந்த போதிலும், பினாங்கில் 5 மாவட்டங்களிலும் இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்குப் போதுமான வசதிகளுடன் ஈமக்கிரி கூடங்கள் நிர்மாணித்து விட வேண்டும் என்பது தம்முடைய மற்றோர் இலக்காக இருந்து வருகிறது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவர் கண்ணியத்துடனும், கெளரவத்துடனும் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இறந்த ஒருவரின் ஈமக்கிரி சடங்கு உரிய மரியாதையுடனும், அமைதியாகவும் நடத்தப்படுவதற்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
பினாங்கு, பாராட் டாயா மாவட்டத்தில் சுங்கை ஆரா, ஸ்ரீ சுப்பிரமணியம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடுகாட்டு நிலத்தில் ஈமக்கிரி சடங்கு செய்வதற்கான கட்டுமானப் பணிகளை ஆலயப் பொறுப்பாளர்களுடன் நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனைத் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, சுங்கை ஆரா ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் நிர்வாகத்தினர், சுங்கை ஆரா இராணுவ முகாமுக்கு எதிரே அமைந்துள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், இறுதிச் சடங்கு செய்வதற்கான கூடம் கட்டுவதற்கான திட்டத்துடன் தம்மை அணுகியதாக சுந்தராஜு குறிப்பிட்டார்.
பொறுத்தமான நேரத்தில் பொருள் பதித்த அவர்களின் அந்த முயற்சிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை நிதி வழங்க தாம் உறுதி அளித்ததாக பிறை சட்டமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சுந்தராஜு விவரித்தார்.
ஈமக்கிரி சடங்குகள் செய்வதற்கான இந்த நவீனக் கூடங்கள், வரும் ஜுன் மாதம் இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.