பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒரு தமிழரையே நியமிக்க வேண்டும்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.07-

119 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைப் பொறுப்பு, ஒரு தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என்று பினாங்கு இந்து வாழ் மக்கள், தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பினாங்கு வாழ் இந்துக்களின் நலனைப் பேணும் தலையாய அமைப்பாக விளங்கி வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் பொறுப்பில் தமிழ் பேசும் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த், ஜாலான் மெங்குவாங்கில் உள்ள டேவான் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்து சங்கத்தின் பட்டர்வொர்த் பேரவையின் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்புக் கூட்டத்தில் பினாங்கு இந்திய வர்த்தக, தொழில் சபையின் தலைவர் டத்தோ பார்த்திபன் உட்பட வர்த்தகர்கள் , அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

பினாங்கில் உள்ள கோவில்கள், இடுகாடுகள், சொத்துக்கள் உட்பட இந்துக்களின் நலன் பேணும் வாரியமாகத் திகழும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், ஒரு போதும் தமிழர் அல்லாத ஒருவருக்கு கைமாறிவிடக் கூடாது. அதனை பினாங்கு வாழ் இந்துக்கள் அனுமதிக்க இயலாது என்று நிகழ்விற்கு தலைமையேற்ற மலேசிய இந்து சங்கத்தின் பட்டர்வொர்த் பேரவைத் தலைவர் சண்முகநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பினாங்கு தற்போது ஜசெக. தலைமையில் ஆட்சி செய்யப்பட்டாலும் தொடக்க காலம் முதல் ஒரு தமிழரே அந்த வாரியத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். அந்த சிறப்பு உரிமையும், அனுமதியும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மொழி அறிந்த ஒருவருக்குதான், இந்துக்களின் நிலையையும், அவர்களின் வலியையும் உணர முடியும். ஆக தமிழ் மொழி அறிந்த ஒரு தமிழர், இந்து அறப்பணி வாரியத்தின் உயரிய பதவியில் இருந்தால் மட்டுமே பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து தீர்க்க முடியும் என்று சண்முகநாதன் தனது உரையில் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS