கோலாலம்பூர், ஏப்ரல்.08-
மலேசியாவிற்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள 24 விழுக்காடு இறக்குமதி வரி தொடர்பில் விவாதிப்பதற்கு தனது பிரதிநிதியை மலேசியா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள 24 விழுக்காடு வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்வளவு காலமாக அமெரிக்காவுடன் மலேசியா கொண்டுள்ள ஒத்துழைப்பானது, இரு நாடுகளுக்கும் ஆதாயம் அளிக்கும் முன்னுதாரண ஒத்துழைப்பாக இருந்தது என்ற பிரதமர் விளக்கினார்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு அமெரிக்கா ஆதரவு தந்ததோ, அதேபோன்று அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும் மலேசியா ஒத்துழைப்பை நல்கியது.
எனவே நாளை அமலுக்கு வரவிருக்கும் அமெரிக்காவின் புதிய வகிதம், இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.