தடுப்புக் கைதி அனில் ராஜ் குடும்பத்திற்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு

ஷா ஆலாம், ஏப்ரல்.08-

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த போது அனில் ராஜ் என்பவர் காச நோயினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் குடும்பத்திற்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

சிறைச்சாலை வார்டன்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் கவனக்குறைவினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

அந்த தடுப்புக் கைதிக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்குவதிலும், அவரை கவனித்துக் கொள்வதிலும் சிறைச்சாலை இலாகாவினர் தவறிவிட்டனர் என்பதை அனில் ராஜ் தாயார் ஆர். உதய சுந்தரியும், தந்தை ஆர்.ரவிச்சந்திரனும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கதீஜா இட்ரிஸ் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சுங்கை பூலோ சிறைச்சாலையின் மூத்த அதிகாரிகள், வார்டன்கள், அந்த சிறைச்சாலையில் உள்ள மூன்று மருத்துவர்கள் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக உதயசுந்தரியும் ரவிச்சந்திரனும் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.

சுங்கை பூலோ சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கையானது, 1995 ஆடம் ஆண்டு சிறைச்சாலை சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிபதி கதீஜா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS