செமினி, ஏப்ரல்.08-
சிலாங்கூர், செமினி சட்டமன்ற உறுப்பினர் நுஷி மாஹ்பொஃட்ஸ், அண்மையில் செமினி, அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்கு வருகைப் புரிந்ததை அரசியல் விவாதப் பொருளாக்க வேண்டாம் என்ற பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜொஹான் கேட்டுக் கொண்டார்.
செமினி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நுஷி மாஹ்பொஃட்ஸ் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்திற்கு வருகை புரிந்ததைத் தற்காத்துப் பேசிய ஜசெக உச்சமன்ற உறுப்பினரான ஷாரெட்ஸான் ஜொஹான், அந்த சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டது கோவிலில் நடத்தப்பட்ட சமய சடங்கு நிகழ்வு அல்ல. மாறாக, அங்கு நடைபெற்ற ஒரு கெளரவிப்பு நிகழ்வாகும் என்றார்.
சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனது தொகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாக்காளர்கள் தொடர்புடைய சமுதாய நிகழ்வில் கலந்து கொள்வது ஒரு பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
காரணம், மக்களைச் சந்திப்பதும், அவர்களின் பிரச்னையைக் கேட்டறிவதும், அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றியமையாதக் கடமைகளில் ஒன்றாகும்.
அதனைச் சமய ரீதியான, அம்சமாக அரசியல் கண்ணோட்டத்தில் வியாக்கியானப்படுத்தும் குறுகிய சிந்தனையிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் விடுபட வேண்டும் என ஷாரெட்ஸான் ஜொஹான் கேட்டுக் கொண்டார்.
செமினி, அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்குத் தாம் வருகை புரிந்தது குறித்து நேற்று விளக்கம் அளித்த செமினி சட்டமன்ற உறுப்பினர் நுஷி மாஹ்பொஃட்ஸ், சமய சடங்கில் தாம் கலந்து கொள்ளவில்லை என்றார்.
மாறாக, தமிழ் சமுதாயத்தின் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும், மாலை அணிவித்தல் மற்றும் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தல் ஆகிய நிகழ்வில் மட்டுமே தாம் கலந்து கொண்டதாக அவர் தெளிவுப்படுத்தியிருந்தார்.