காராக், ஏப்ரல்.08-
மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிழக்கை நோக்கி ஆன்மீகப் பயணம், இரண்டாவது நாளாக இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தொடங்கியது.
கிளப் மராத்தோன் மாரான் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக தொடங்கிய இந்த ஆன்மீகப் பயணம், காராக்கிலிருந்து லஞ்சாங்கை நோக்கி, அமைந்தது.

இந்தப் பயணம், பங்கேற்பாளர்களின் உடல் வலிமை மற்றும் மன சகிப்புத்தன்மையைச் சோதிப்பதாக அமைந்தது என்றார் இந்த ஆன்மீகப் பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவருமான டாக்டர் R. சிவபிரகாஷ்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் அதிகாலை 2.30 மணி எழுந்து, காலை கடன்களை முடித்துவிட்டு, 4.00 மணிக்கு நடக்கத் தொடங்கினர்.

வானம் காரிருளாகவே இருந்தது. பனிக்காற்றில் உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் களமாக இருந்த போதிலும் அனைவரும் எவ்வித சோர்வின்றி உற்சாகமாகர்க் தங்கள் பயணத்தைப் தொடங்கினர்.

காலை சிற்றுண்டியைக் கடந்த ஆண்டுகளைப் போலவே லஞ்சாங் பிரதர்ஸ் இளையோர்கள் வழங்கினர். அதன் பின்னர் பங்கேற்பாளர்கள் தங்கள் நடைப் பயணத்தைத் தொடங்கி, மதியம், மெந்தக்காப், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு வழங்கப்பட்ட மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இந்த ஆன்மீகப் பயணத்திற்கு துணை புரிந்த நல்லுள்ளங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் குழு சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

பிற்பகலில் மீண்டும் தொடங்கிய இந்த நெடும் பயணத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு தெமர்லோ, டேவான் மஜ்லிஸ் தாமான் ஶ்ரீ கேரினாவ் மண்டபத்தைச் சென்றடைவர். அவர்கள் ஓய்வு பெறுவதற்கும், பாதம் நீவுதலுக்கும், தங்குவதற்கும் உரிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.