செபராங் பிறை, ஏப்ரல்.08-
பினாங்கு, செபராங் பிறையில் உள்ள இரண்டு ஆலயங்ளுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வழங்கிய தலா 5 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவியை, அந்த வாரிய ஆணையரும், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட ஆலயங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.

சுங்கை டூவா, ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் செபராங் ஜெயாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலயம் ஆகிய இரண்டு ஆலயங்களுக்கு நேரடியாக வருகை புரிந்த குமரன், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் அந்த நிதி உதவிக்கான காசோலைகளைச் சேர்ப்பித்தார்.
ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் சமய நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கும், ஆலயத்தை வழிநடத்தவும் துணை நிற்கும் வண்ணம் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்த நிதி உதவியை வழங்கியிருப்பதாக குமரன் குறிப்பிட்டார்.

இந்த நிதி உதவியானது, ஆலய நிர்வாகத்தின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்பதுடன் அவர்களால் திட்டமிடப்படக்கூடிய சமய நடவடிக்கைகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று குமரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதே வேளையில் இரு ஆலயங்களுக்கும் தாம் மேற்கொண்ட வருகையின் போது, தமக்கு பூரணத்துவ மரியாதை வழங்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டதற்காக இரு ஆலயங்களின் பொறுப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குமரன் குறிப்பிட்டார்.