கோலாலம்பூர், ஏப்ரல்.08-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 403 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் மூன்று வாகனங்கள் சம்பந்தபட்ட விபத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவர் பலியானார். இதர நால்வர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இந்த விபத்து தொடர்பாக பிற்பகல் 1.27 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
ஒரு டிரெய்ல் லோரி, மூன்று டன் லோரி ஒன்று மற்றும் டொயோட்டா ரக கார் ஒன்று இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதில் யாரும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கவில்லை என்ற போதிலும் மூன்று டன் லோரியில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க வங்காளதேசப் பிரஜை ஒருவர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
51 வயது லோரி ஓட்டுநர் மற்றும் இதர மூவர் காயமுற்றதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.