கோலாலம்பூர், ஏப்ரல்.08-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்து, தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மெளனம் காத்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அளவிட முடியாத சேதங்களும், பொது மக்களுக்குக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் முதல் தேதி, சம்பவம் நிகழ்ந்த அன்று முதல் இன்று வரை அமைச்சின் பிரதிநிதிகள் யாரும் அப்பகுதியில் களம் இறங்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு அபாண்டமானது என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதுதான் இப்போது நம் முன் இருக்கும் முக்கிய விவகாரமாகும். இன்றளவில் ஒவ்வோர் அமைச்சும் அங்கு உதவித் திட்டங்களை வழங்கிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது.
தவிர தாம் அங்கம் வகிக்கும் ஜசெக.வும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ங்கா கோர் மிங் விளக்கினார்.