கோலாலம்பூர், ஏப்ரல்.08-
பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு எல்லைப் பகுதிகளை மலேசியா மேம்படுத்தவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக தீபகற்ப மலேசியாவில் வடப் பகுதியில் தாய்லாந்துடன் ஒட்டிய எல்லைப் பகுதி மற்றும் சபா, சரவாவில் காலிமந்தானுடன் ஒட்டிய எல்லைப் பகுதி ஆகியவற்றை மேம்படுத்த மலேசியா உறுதிப்பாடு கொண்டுள்ளது.
இதன் மூலம் எல்லைகளில் இரு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பொருளாதார நடவடிக்கை வாயிலாக நன்மைப் பெற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு சிறந்த சான்று, ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியாகும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இன்று கோலாலம்பூரில் 2025 ஆம் ஆண்டின் ஆசியான் முதலீட்டு மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.