சிறந்த சேவையை வழங்க முடியும்: பவானி உறுதி

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.08-

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் சார்பில் போட்டியிடவிருக்கும் பவானி, தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்று சூளுரைத்துள்ளார்.

ஆயர் கூனிங்கில் பிறந்து வளர்ந்து மனித உரிமை வழக்கறிஞராக திகழும் பவானி, இந்த இடைத் தேர்தல் சவால் மிகுந்ததாக இருந்த போதிலும் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் இருப்பதால், இதர வேட்பாளர்களைத் தம்மால் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் இருப்பதாக மும்மொழிகளில் ஆற்றல் பெற்றவரான பவானி குறிப்பிட்டார்.

பேரா மாநில பிஎஸ்எம் கட்சித் தலைவராகப் பொறுப்பில் இருக்கும் பவானியின் வெற்றியை உறுதிச் செய்வதற்கு பிஎஸ்எம் உறுப்பினர்கள் பெருவாரியாகக் களம் இறங்கியுள்ளனர் என்பதற்கு இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வு ஒரு சான்றாகும்.

இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய வேட்பாளர்களுக்கு பவானி கடும் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS