உயிர்ப் பலி சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றனவா? உண்மையில்லை என்கிறார் சிலாங்கூர் போலீஸ் தலைவர்

சுபாங் ஜெயா, ஏப்ரல்.08-

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் உயிர்ப் பலி சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதாகக் கூறப்படுவதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் வன்மையாக மறுத்துள்ளார்.

உயிர்ப் பலி சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது அறவே உண்மையில்லை என்று டத்தோ ஹுசேன் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ, பொருள்கள் மற்றும் உடமைகள் காணாமல் போனதாகவோ எந்தவொரு போலீஸ் புகாரும் பெறப்படவில்லை.

இந்த தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பில் இதுவரை போலீஸ் துறை 675 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர்கள் உட்பட 186 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வெடி விபத்து சம்பவத்திற்குப் பிறகு மக்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிரதான சாலையில் போலீசார் 24 மணி நேர பாதுகாப்புக் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு 120 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உண்மையிலே தங்கள் பொருட்கள் எதுவும் காணவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உயிர்ப் பலி சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து இருக்குமானால் அவற்றை மறைப்பதில் யாருக்கு என்ன லாபம் என்று டத்தோ ஹுசேன் ஒமார் வினவினார்.

WATCH OUR LATEST NEWS