கோலாலம்பூர், ஏப்ரல்.09-
வாகனமோட்டும் உரிமமின்றி, சாலையில் வாகனத்தைச் செலுத்திய சீன நாட்டுப் பிரஜையிடமிருந்து Lamborghini Aventador சொகுசுக் காரை சாலை போக்குவரத்து இலாகாவான JPJ பறிமுதல் செய்தது.
2025 ஆம் ஆண்டுக்கான ஹரிராயா ஒருங்கிணைந்த நடவடிக்கையை போலீசார் நேற்று கோலாலம்பூர், ஜாலான் பங்சாரில் மேற்கொண்ட போது சமூக வலைத்தள உள்ளடக்க கிரியேட்டரான 28 வயதுடைய அந்த சீன நாட்டுப் பிரஜை, தடுத்து நிறுத்தப்பட்டார்.
கெப்போங்கில் உள்ள ஓர் உணவகத்திற்குச் சென்று விட்டு, டமான்சாரா ஹைட்ஸில் உள்ள வீட்டிற்குத் தனது காதலியுடன் ஒய்யாரமாகத் திரும்பிக் கொண்டு இருந்த அந்த நபரை, JPJ அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவரின் ஆவணங்களைச் சோதனையிட்டனர்.
அப்போது அந்த நபர் ஒரு சீனநாட்டுப் பிரஜை என்பது தெரியவந்ததுடன், அவரிடம் வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த நபர், தடுக்கப்பட்டதுடன், அவரின் விலை உயர்ந்த கார், பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மொத்தம் 1,627 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர், கூட்டரசு பிரதேச சாலைப் போக்குவரத்து இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.