ஈப்போ, ஏப்ரல்.09-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈப்போ, மேரு ராயா அருகில் ஜாலான் மேரு பெஸ்தாரியில் வெட்டுக்கத்தி மற்றும் சமுராய் கத்தி ஆகியவற்றை ஏந்திக் கொண்டு கலவரம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
19 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஒன்பது பேரும், கடந்த திங்கட்கிழமை காலை 6.45 மணியளவில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
இந்த ஒன்பது பேர், கைது செய்யப்பட்டது மூலம் ஒரு வெள்ளை நிற BMW கார், கோல்ப் மட்டை, பூட்டுக்கு பயன்படுத்தப்படும் Stereng ( ஸ்டேரிங் ) மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயுதங்களைத் தாங்கி கும்பல் ஒன்று, தன்னை தாக்கியதாக உள்ளூரைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.30 மணியளவில் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதுவாக தேடுதல் வேட்டை தொடங்கியதாக ஏசிபி அபாங் ஸைனால் தெரிவித்தார்.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் இந்த தாக்குதலும், கலவரமும் நடந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.