சென்னை, ஏப்ரல்.09-
முதுபெரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், தலைசிறந்த பேச்சாளருமான குமரி அனந்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.
வயது மூப்பு காரணமாக நேற்று ஏப்ரல் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இலக்கியச் செல்வர் என்று வர்ணிக்கப்பட்ட குமரி அனந்தன், முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் அண்ணனுமாவார்.
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது’ பெற்றவர் குமரி அனந்தன்.
குமரி ஆனந்தன், தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் அவர். அத்துடன், 1977ஆம் ஆண்டு நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கும் சென்றார்.
குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 1987 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் மலேசியா ஏற்று நடத்திய ஆறாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைச் சமர்ப்பித்த முக்கியப் பேச்சாளர்களில் குமரி அனந்தனும் ஒருவர் ஆவார்.
மறைந்த மஇகா தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தலைசிறந்த இரு பேச்சாளர்கள் என்று பேராளர்களால் ஏகமனதாக வர்ணிக்கப்பட்டவர்கள் குமரி அனந்தன் மற்றும் கி.ஆ.பெ. விஸ்வநாதன் ஆவர்.
குமரி அனந்தனின் நல்லுடல் இறுதி அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.