புத்ராஜெயா, ஏப்ரல்.09-
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதில் CelcomDigi, / Maxis, / TM Unifi, / U Mobile மற்றும் YES உள்ளிட்ட தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்புகளையும், ஆதரவையும் தகவல் தொடர்பு அமைச்சு வரவேற்பதாக அதன் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் உதவிகள் மற்றும் மீட்சிக்கான ஆதரவுகளில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சேவை கட்டணங்களிலிருந்து ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு விலக்களிப்பு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச உபகரணங்கள் மாற்றுதல் மற்றும் சிம் கார்டு பரிமாற்றம், அத்துடன் புத்ரா ஹைட்ஸ் தற்காலிக பரிமாற்ற மையமான பிபிஎஸில் இலவச
wi-fi 5G சேவைகள் ஆகியவை அடங்கும் என்று டத்தோ பாஃமி சுட்டிக் காட்டினார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தொலைத் தொடர்புக்கான ஆதரவு மற்றும் மறுசீரமைப்பு உதவிகள் வழங்குவது, அவ்வப்போது அவற்றின் தேவைகளைப் பொறுத்ததாகும்.
குறிப்பாக, இந்த உதவிகளும், சேவைகளும் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் பொறுத்து, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாறுபடும் என்பதையும் டத்தோ பாஃமி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனில் அதிக அக்கறையும், பரிவுவையும் காட்டி வரும் மடானி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஏற்ப வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் வாடிக்கையாளர்களின் நல்வாழ்வில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டுள்ள அக்கறையையும், பங்களிப்பையும் இந்த உதவிகள் நிரூபிக்கின்றன என்று பாஃமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.