மிரட்டி பணம் பறித்ததாக நான்கு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.09-

ஆடவர் ஒருவரை மிரட்டி 18 ஆயிரம் ரிங்கிட்டைப் பறித்ததாக நான்கு நண்பர்கள் பினாங்கு, ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

36 வயது P. வீரன், 22 வயது S. ரோஹன், 20 வயது L. யுவராஜன் மற்றும் 22 வயது S. சிவா ஆகிய நான்கு நபர்கள் மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் பினாங்கு, குளுகோர், ஜாலான் ஹெலாங்கில் உள்ள டேசா அயிர் மாஸ் அடுக்குமாடி வீட்டில் 55 வயது S. பிரபாகரனை மிரட்டி 18 ஆயிரம் ரிங்கிட் பறித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு நண்பர்களில் ரோஹன் மற்றும் வீரன் ஆகிய இருவரும் தங்களைப் போலீஸ்காரர்கள் என்று கூறிக் கொண்டு, பிரபாகரனைக் கைது செய்யப் போவதாக மிரட்டி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் வீரன், ரோஹன், யுவராஜு மற்றும் சிவா ஆகியோர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 7 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி அனுமதி அளித்தார்.

இதனிடையே தங்களைப் போலீஸ் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு செயற்கைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி பிரபாகரனை மிரட்டியதாக வீரனும், ரோஹனும் மற்றொரு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நட்ராதுன் நாயிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

செயற்கைத் துப்பாக்கியைப் பயன்படுத்தியதால் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் வீரனும் ரோஹனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS