ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 5 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

ஹைதராபாத், ஏப்ரல்.09-

ஹைதராபாதில், கடந்த 2013-ல் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை உறுதிச் செய்து, தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 2013, பிப். 21-ல் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. பஸ் நிலையம் மற்றும் அருகில் இருந்த கடை ஆகியவற்றில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர்; 131 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பினர் முக்கியக் காரணமாக இருந்தனர். இது தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்தியன் முஜாகிதீன் இணை நிறுவனர் ஒருவர் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து 2016-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில், குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே பயங்கரவாதிகள் ஐந்து பேரின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS