கூலாய், ஏப்ரல்.09-
பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களைச் சேகரித்து, அவர்களின் முகத் தோற்றத்தைப் பயன்படுத்தி, ஆபாசப் படங்களாகத் தணிக்கை செய்து, சமூக வலைத்தளங்களின் பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் 16 வயது மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது முகத் தோற்றத்தைப் பயன்படுத்தி, ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாக்கப்பட்டு, விற்கப்பட்டு வருவதாக உள்ளூரைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் அப்பட்டமான கைங்கரியம் அம்பலத்திற்கு வந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் இன்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்ற ஜோகூர், கூலாய் மாவட்ட வர்த்தக குற்றவியல் தடுப்புப் போலீசார் இது குறித்து புலன் விசாரணைச் செய்யத் தொடங்கியதில் அதே வட்டாரத்தில் 16 வயதுடைய மாணவனைப் போலீசார் நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்தனர்.
பெண்களின் முகத் தோற்றத்தைப் பயன்படுத்தி, தணிக்கைச் செய்வதற்கு அந்த இளைஞர் பயன்படுத்தி வந்த கைப்பேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
இடைநிலைப்பள்ளியில் பயிலும் அந்த மாணவன், ஒவ்வொரு ஆபாசப் படத்தையும் தலா 2 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களின் புகைப்படங்களைச் சேகரித்து AI தொழில்நுட்பத்தின் மூலமாக அந்தப் பெண்கள் ஆபாசத் தோற்றம் அளிப்பது போல் தணிக்கை செய்து, அந்தப் படங்களைச் சம்பந்தப்பட்ட மாணவன் விற்பனை செய்து வந்துள்ளான் என்று டத்தோ குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எட்டுப் புகார்களைப் போலீசார் பெற்று இருப்பதாக அவர் விளக்கினார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த மாணவனை வரும் சனிக்கிழமை வரை 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.