கோலாலம்பூர், ஏப்ரல்.10-
தனது வர்த்தகச் சகாக்களுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, அந்த வரி விதிப்பின் அமலாக்கத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அது எடுத்துள்ள முடிவை மலேசியா வரவேற்றுள்ளது.
தனது வர்த்தகச் சகாக்களின் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் கருத்தில் கொண்டு, நேற்று அமலுக்கு வரவிருந்த புதிய வரி விதிப்பை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்று மலேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு ஸாப்ஃருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவின் நிர்ணயமில்லாத இந்த நடவடிக்கை, ஆசியான் பொருளாதாரத்திற்கு மிகப் பெரியச் சவாலை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் தெங்கு ஸாப்ஃருல் ஒப்புக் கொண்டார்.
அமெரிக்காவுடன் வர்த்தகம் கொண்டுள்ள நாடுகளுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பில் இறக்குமதி செய்யப்படும் மலேசியாப் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரியை விதித்துள்ளார்.