புத்ரா ஹைட்ஸ் பேரிடரில் உதவ விரும்பாவிட்டால் வாய் சவடால் வேண்டாம் – அந்தோணி லோக் தனது வாதத்தைத் தற்காத்தார்

சுபாங் ஜெயா, ஏப்ரல்.10-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிவிபத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பாதவர்கள், வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு போக்குவரத்து அமைச்சரும், ஜசெக பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஜசெக முன்னெடுத்த நிதி வசூலிப்புத் திட்டத்தை கடுமையாகஒ குறைகூறி, விமர்சனம் செய்து வருகின்றவர்களை நோக்கி, கடந்த சனிக்கிழமை சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில், வாயை மூடுங்கள் என்று தாம் கண்டித்த முறையை அந்தோணி லோக் தற்காத்துப் பேசினார்.

தாம் கண்டித்த முறை சற்று, கடுமையாக இருந்தாலும் தாமும் சராசரி மனிதரே தவிர தெய்வம் கிடையாது என்று அந்தோணி லோக் விளக்கம் அளித்தார்.

தீ விபத்து நடந்த தினத்திலிருந்து, தாங்கள் களம் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தெந்த ரூபத்தில் உதவ முடியும் என்பதை ஆராய்ந்து உதவி செய்து வருகிறோம். ஆனால், எந்த உதவியும் செய்யாதவர்கள், வெறும் வாய் சவடால் வழி தங்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருப்பதைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அந்தோணி லோக் விளக்கினார்.

காரணம், அரசியல் விவகாரமாக இருந்தால், எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், நடந்த சம்பவமோ ஒரு பேரிடர். பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து, ஆறாத் துயரில் நிர்கதியாகியுள்ளனர்.

இத்தகைய துயரமான நெருக்கடியான, சோகம் நிறைந்த சூழலில், இந்த தீ பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் சார்ந்த விவகாரம், தனது போக்குவரத்து அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்றாலும் தாம் சென்று உதவ வேண்டும் என்று அமைச்சரவைக் கேட்டுக் கொள்ளாத நிலையிலும், கூட்டு மனப்பான்மையுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு மூன்று முறை தாம் களம் இறங்கியிருப்பதாக அந்தோணி லோக் விளக்கினார்.

இத்தகைய பேரிடரைக் கூட அரசியலாக்கி, சுகம் காண்பதற்கு குறிப்பிட்டத் தரப்பினர், பொது மக்களின் உணர்ச்சிகரமான விவகாரத்தைத் தூண்டி விட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதனால்தான், உதவ முடியாவிட்டால் வாயை மூடிக் கொண்டு இருங்கள் என்று தாம் சற்றுக் கடுமையாகக் கண்டித்ததாக அந்தோணி லோக் விளக்கம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS