ராசா ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு அங்கீகாரம்

சிரம்பான், ஏப்ரல்.10-

நாட்டில் 114 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட மிகப் பழமை வாய்ந்த ஆலயமான சிரம்பான், ராசா ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் நிலம், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அந்த பழம் பெரும் ஆலய நில விவகாரம் தொடர்பாக ஆலய நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் புஷ்பநாதன், கடந்த 2023 ஆம் ஆண்டில் தம்மைச் சந்தித்து, பிரச்னையை விளக்கியதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

நீண்ட கால கோவிலான இந்த ஆலய நிலத்தை கோவிலுக்கே சைம் டார்பி வழங்க வேண்டும். இந்த நிலப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று விஸ்மா நெகிரியில் தம்மை சந்தித்த போது புஸ்பநாதன் கேட்டுக் கொண்டதாக வீரப்பன் விளக்கினார்.

குறிப்பாக, குத்தகை அடிப்படையில் நிலத்திற்கு குறைந்த வாடகையைச் செலுத்தி வந்த கோவில் நிர்வாகம், குத்தகை ஒப்பந்தம் காலாவதியான நிலையில் மீண்டும் குத்தகையைப் புதுப்பிப்பதில் புதிய கட்டணமாக சைம் டார்பி நிறுவனம் 4 ஆயிரம் ரிங்கிட் உயர்த்தியிருப்பதைத் தமது கவனத்திற்குக் கொண்டு வந்ததாக வீரப்பன் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, கோவில் நிர்வாகத்திற்கும், சைம் டார்பிக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் சைம் டார்பி நிறுவனம் கோவில் நிர்வாகத்திற்கு இரண்டு விருப்புரிமையை வழங்கியிருந்தது. கோவில் நிலத்தை வாங்கிக் கொள்ளுங்கள், அல்லது மாநில அரசாங்கத்தின் மூலமாக அந்த நிலத்தை ஆர்ஜீதம் செய்து கொள்ளுங்கள் என்று இரண்டு விருப்புரிமையை சைம் டார்பி வழங்கி இருக்கிறது.

இந்த விவகாரத்தை வழக்கறிஞர் புஷ்பநாதன் விளக்கியப் பின்னர் சைம் டார்பிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி தாம் ஒரு கடிதம் எழுதியதாக வீரப்பன் தெரிவித்தார்.

இந்த கோவில் பழமை வாய்ந்த கோவிலில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி அந்த ஒரு ஏக்கர் நிலத்தை, ESG எனப்படும் சுற்றுச்சூழல், சமூகவியல், நிர்வாக நடைமுறை கடப்பாட்டின் கீழ் கோவிலுக்கே வழங்குமாறு அந்த கடிதத்தில் தாம் வலியுறுத்தியிருந்ததாக ரெப்பா சட்டமன்ற உறுப்பினரான வீரப்பன் குறிப்பிட்டார்.

ஒன்றரை மாத கால இடைவெளிக்கு பிறகு சைம் டார்பி தமக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த ஒரு ஏக்கர் நிலத்தை நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்திடமே ஒப்படைப்பதாகத் தெரிவித்து இருந்தது என்று வீரப்பன் கூறினார்.

அந்த ஒரு ஏக்கர் நிலம், மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர் கோவில் நிர்வாகத்தின் பெயரிலேயே தனி நிலப் பட்டாவாக வழங்கிவிடும்படி வழக்கறிஞர் புஷ்பநாதன் கேட்டுக் கொண்ட போதிலும் அரசுக்குச் சொந்தமான நிலத்தை அவ்வாறு தனி நிலப் பட்டவாக வழங்க இயலாது. கோவிலுக்கு ஒதுக்கீடு மட்டுமே செய்ய முடியும் என்பதைத் தாம் அவரிடம் விளக்கியதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

எனினும் நில அலுவலக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்த பின்னர் நில விவகாரம் மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதில் விவாதித்த பின்னர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அந்த ஒரு ஏக்கர் நிலம், கோவிலுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மாநில ஆட்சிக்குழு அங்கீகாரம் வழங்கி விட்டதாக வீரப்பன் விளக்கினார்.

இந்த கோவில் நில விவகாரம் தொடர்பாக ஆலயத் தலைவர் விஜயராகவன், செயலாளர் சந்திரசேகரன், வழக்கறிஞர் புஸ்பநாதன் மற்றும் ஆலய நிர்வாகப் பொறுப்பாளர்களுடன் தாம் நடத்திய சந்திப்பின் போது, நெகிரி செம்பிலான் தொழில்துறை மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் தியோ கோக் சியோங்கும் கலந்து கொண்டதாக வீரப்பன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS