புத்ராஜெயா, ஏப்ரல்.10-
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எதிரான முதல் கட்ட விசாரணை முடிவடைந்து விட்டதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று தெரிவித்துள்ளார்.
இனி, இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கவிருப்பதாக அஸாம் பாக்கி விளக்கினார். இந்த முறை, இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக அவரின் சொத்துக்கள் அறிவிப்பு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பொறுப்பேற்று இருந்த இஸ்மாயில் சப்ரி, தனது 14 மாத கால ஆட்சியில் அவர் அறிமுகப்படுத்திய மலேசிய குடும்பம் என்ற பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மடை மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்மாயில் சப்ரியின் 4 முன்னாள் அதிகாரிகள் பிடிபட்டது மூலம் ஒரு வீட்டில் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணமும், 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களையும் எஸ்பிஆர்எம் கைப்பற்றியுள்ளது. இதன் தொடர்பில் 5 நாட்களுக்கு இஸ்மாயில் சப்ரி 15 மணி நேரத்திற்கும் அதிகமாக எஸ்பிஆர்எம்மால் விசாரணை செய்யப்பட்டார்.