வரி விதிப்பை அமெரிக்கா 90 நாட்களுக்கு ஒத்திவைப்பு – சற்று நிவாரணம் அளிக்கிறது

புத்ராஜெயா, ஏப்ரல்.10-

மலேசியா உட்பட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு அமலாக்கத்தை 90 நாட்களுக்கு ஒத்தி வைப்பதற்கு அந்த நாடு முடிவு செய்து இருப்பது, சற்று நிவாரணம் அளிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவினால் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் எரிசக்தி மற்றும் நீர் உருமாற்றம் அமைச்சின் கீழ் நடைபெற்ற ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனது சுருக்கமான செய்தியில் அன்வார் இதனை தெரிவித்தார்.

இந்த பொது உபசரிப்பில் துணைப்பிரதமரும் எரிசக்தி மற்றும் நீர் உருமாற்றம் அமைச்சருமான டத்தோஶ்ரீ பாஃடில்லா யுசோப்பும் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், கிட்டத்தட்ட 90 நாடுகளுக்கு 10 விழுக்காட்டிற்கும் கூடுதலான வரியை அறிவித்தார். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குச் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அதிரடியாக கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்தது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் மலேசியாவிற்கு டிரம்ப், 24 விழுக்காடு வரியை அறிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS