பாட்னா, ஏப்ரல்.10-
பீஹாரின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்று, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. ஆலங்கட்டி மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வரும் 12ம் தேதி வரை, பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைச் சீற்றம் காரணமாக 19 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து உள்ள முதல்வர் நிதீஷ் குமார், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுட்டுள்ளார். பயிர் சேதம் மற்றும் கால்நடைகள் இறப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.