பெய்ஜிங், ஏப்ரல்.10-
சீனாவில், மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 20 முதியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வட பகுதியில் உள்ள ஹெபே மாகாணத்தின் செங்க்டே நகரில் உள்ள மருத்துவமனையொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அம்மருத்துவமனையில் 39 முதியோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் அந்த இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இதில் சிக்கி 20 முதியோர் பலியாகினர். மற்ற 19 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு விதிமுறையை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி முதியோர் இல்ல நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.