ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.10-
பினாங்கு பாயான் லெப்பாசில் நிகழ்ந்த தீ விபத்தில் தங்கள் வாடகை வீடு, முற்றாகச் சேதமுற்ற நிலையில், வீட்டையும், உடமைகளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய ஓர் இந்திய குடும்பத்தினர், தற்காலிகமாக தங்குவதற்கு பினாங்கு மாநில அரசின் ஆபத்து, அவசர நிவாரணத்திற்குரிய ஒரு வீட்டை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ முருகையாவிடமிருந்து பெற்றப்பட்ட ஓர் அவசர வேண்டுகோளுக்கு இணங்க அந்த இந்திய குடும்பம் தற்காலிகமாகத் தங்குவதற்கு அவ்வீட்டை வழங்கி, அதற்கான சாவியையும் டத்தோஸ்ரீ சுந்தராஜ் ஒப்படைத்தார்.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், இந்த இழப்பிலிருந்து மீட்சி பெறும் வரையில் இரண்டு மாதத்திற்கு வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் இலவசம் என்றும், வீட்டைத் திருப்பி ஒப்படைக்கும் போது, எப்படி வழங்கப்பட்டதோ, அது போலவே சுத்தமாக ஒப்படைத்தால் போதுமானதாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தஞ்சம் புகுவதற்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய டத்தோஸ்ரீ சுந்தராஜுவிற்கு டத்தோ முருகையா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.