சுபாங் ஜெயா, ஏப்ரல்.10-
கடந்த ஏப்ரல் முதல் தேதி, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் மரணம் நிகழ்ந்து இருப்பதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பிலான அந்த தகவல் குறித்து மாவட்ட சுகாதார மையம் புகார் ஒன்றை அளித்து இருப்பதாக ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.
அடிப்படையற்ற ஒரு குற்றச்சாட்டு பகிரப்பட்டு வருவதன் விளைவாக இது குறித்து குற்றவியல் சட்டம் 500 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹுசேன் ஓமார் தெரிவித்தார்.