கோலாலம்பூர், ஏப்ரல்.10-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 191.28 கிலோகிராம் கெத்தாமின் போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்தது.
60 வயது அப்துல் வாஹாப் மற்றும் 52 வயது முகமட் ராபிஃக் ஆகிய இரண்டு பாகிஸ்தானியர்களும், தங்களின் தற்காப்பு வாதத்தில், போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் தோல்விக் கண்டதாக நீதிபதி அஸார் அப்துல் ஹாமிட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கிள்ளான், தாமான் தெலுக் காடோங் இண்டா, மற்றும் கோலாலம்பூர், டாங் வாங்கி, ஜாலான் முன்ஷி அப்துல்லா ஆகிய பகுதிகளில் மொத்தம் 191.28 கிலோகிராம் போதைப் பொருளைக் கடத்தியதாக இரு பாகிஸ்தான் ஆடவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.