அந்த தனியார் பள்ளி, கடுமையானக் குறைகூறல்களுக்கு இலக்கானது

கூலாய், ஏப்ரல்.10-

மாணவிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஆபாசப் படங்களாகத் தணிக்கை செய்து சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வந்த மாணவன் விவகாரத்தை கையாண்ட அணுகுமுறை தொடர்பில் ஜோகூர், கூலாயில் உள்ள பூஃன் யியூ தனியார் இடைநிலைப்பள்ளி நிர்வாகம் கடுமையானக் குறைகூறல்களுக்கு இலக்காகியுள்ளது.

16 வயதுடைய அந்த மாணவனின் செயல், தெரியவந்தவுடன், பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்குமானால் அதிகமான மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள் என்று கூறி, பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் பொது மக்களின் அந்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட பள்ளியின் மேலாளர் வாரியம் மறுத்துள்ளது.

அந்த மாணவனின் விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து, மென்மையாக நடந்து கொள்ளவில்லை. மாறாக, அந்த மாணவனைப் பள்ளியை விட்டே நீக்கிவிட்டதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் முன்னதாக அறிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS