கோலாலம்பூர், ஏப்ரல்.10-
கோலாலம்பூர் மாநகரில் முக்கிய நில அடையாளப் பகுதியில் வீற்றிருக்கும் 9,723 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு நிலத்தின் உரிமையை அம்னோவின் பெயருக்கு மாற்றும்படி அந்த அரசியல் கட்சி வழக்கு மனு ஒன்றை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த நிலத்தின் உரிமை தற்போது முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மற்றும் இதர மூன்று நபர்களின் பெயர்களில் இருப்பதாக அம்னோ தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அந்த நிலம், அம்னோவிற்குச் சொந்தமானதாகும். அது நியாயப்பூர்வமாக அம்னோவிற்குச் சேர வேண்டும் என்று அந்த அரசியல் கட்சி தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வழக்கில் கூட்டரசு பிரதேச நில மற்றும் கனிம வள இலாகாவைப் பிரதிவாதியாக அம்னோ பெயர் குறிப்பிட்டுள்ளது என்று அம்னோ நிர்வாகச் செயலாளர் டத்தோ சுமாலி ரெடுவான் தெரிவித்துள்ளார்.