கோலாலம்பூர், ஏப்ரல்.10-
கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளமாக விளங்கும் மெனாரா கோலாலம்பூர் எனும் கோலாலம்பூர் ஒற்றை கோபுரத்தின் அடியில், 1996 ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீர் முகமதுவினால் புதைக்கப்பட்ட ஒரு புதைப் பொருள் ரகசியம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்படவிருக்கிறது.
அந்த புதைப் பொருள் ரகசியத்தில் துன் மகாதீர் என்ன செய்தியை வழங்கியுள்ளார் என்பதை அறிய மக்கள் மிக ஆர்வமாக இருக்கும் அதே வேளையில் வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் கோபுரத்தில் கொண்டாடப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான ஹரி ராயா பொது உபசரிப்பு நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்த புதைப் பொருள் தோண்டி எடுக்கப்படவிருக்கிறது.
மெனாரா கோலாலம்பூர் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் 30 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட அந்தப் புதைப் பொருளை துன் மகாதீரே அதிகாரப்பூர்வமாகத் தோண்டி எடுக்கவிருக்கிறார்.
நாட்டின் நான்காவது பிரதமரான துன் மகாதீர், 1996 ஆம் ஆண்டில் அந்த ஒற்றை கோபுரத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில், நாட்டு மக்களுக்கான ஒரு முக்கிய செய்தியை விட்டுச் செல்வதாகவும், அதனை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்து பார்க்கும்படி கூறி, அந்த மர்மப் பொருளை அவரே அதிகாரப்பூர்வமாகப் புதைத்தார்.
அந்த முக்கிய ஆவணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை துன் மகாதீர், 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது 100 ஆவது வயதில் அவரே தோண்டி எடுத்து அறிவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பது, ஓர் அதிசய நிகழ்வாகும் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
அம்னோ கட்டடம், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கோலாலம்பூர் கோபுரம் ஆகிய மூன்று இடங்களில் ரகசியப் பொருள்களைப் புதைத்து அவற்றைத்க் தோண்டி எடுப்பதற்கான கால வரம்பையும் துன் மகாதீர் நிர்ணயித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.