பேங்காக் விமானப் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய நாட்டவர்

புதுடெல்லி, ஏப்ரல்.11-

இந்தியா, டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்ந்தது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்தது. துஷார் என்ற 24 வயதுடைய இந்தியப் பயணி, மது போதையில், இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிறுநீர் கழிக்க இருக்கையில் இருந்து எழ அவர் முயன்றுள்ளார். அவரால், எழுந்திருக்க இயலாத நிலையில், நின்றவாறே, அருகில் அமர்ந்திருந்த ஜப்பானிய பயணி மீது சிறுநீர் கழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா AI 2336 என்ற விமானத்தின் வர்த்தக வகுப்பில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு ஆளான அந்த ஜப்பானியப் பயணி, பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகினார். எனினும் அவருக்குத் தேவையான உதவிகளை ஏர் இந்தியா பணியாளர்கள் செய்தனர்.

விமானம் பேங்காக்கில் தரையிறங்கியதும், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆளான அந்த இந்தியப் பயணி, அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.

இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் இருந்த ஒரு பயணி, வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS