கோலாலம்பூர், ஏப்ரல்.11-
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சுவாராம் அமைப்பு, தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த கொடுங்கோல் சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 66 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் 175 பேர் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவாராம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெர்னல் தான் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இந்த சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் சுவாராம் உறுதியாக இருந்து வருவதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்யாமலேயே குறிப்பிட்ட காலம் வரையில் தடுப்புக் காவலில் வைப்பதற்கு சொஸ்மா வகை செய்கிறது. இது உண்மையிலேயே மனித உரிமை மீறலாகும் என்று ஜெர்னல் தான் தெரிவித்தார்.
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று கூறி, 2023 ஆம் ஆண்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு , அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோலாலம்பூர் – சிலாங்கூர் சைனிஸ் அஸ்சம்ளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜெர்னல் தான் இவ்வாறு தெரிவித்தார்.