பெந்தோங், ஏப்ரல்.11-
சிறார்கள் மற்றும் பருவ வயது வந்த இளையோர்கள் மத்தியில், தகாத உறவு மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது, பிளவுப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்பதைக் காட்டுகின்றன என்று பெந்தோங் எம்.பி. யோங் ஷெபுஃரா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
கிளந்தானில் 11 வயது சிறுவன், காதல் வயப்பட்டு, தனது உறவினரின் 15 வயதுப் பெண்ணைக் கர்ப்பிணியாக்கி இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி, உண்மையிலேயே வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஜசெக உச்சமன்ற உறுப்பினரான யோங் ஷெபுஃரா குறிப்பிட்டார்.
இது போன்ற சம்பவங்கள் சமூக அந்தஸ்து மற்றும் அவற்றின் மதிப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவையும், குழந்தைகளுக்கு பாலியல் கல்வியின் அவசியத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அந்த இளம் பெண் எம்.பி. தெரிவித்தார்.
இத்தகைய ஒழுங்கீன செயல்கள் தலைத்தூக்குவதற்கு குடும்ப அமைப்பு முறையில் எங்கே தவறுகள் நிகழ்ந்துள்ளன, அவற்றுக்கு யார் காரணம் முதலியவற்றை ஆராய்ந்து, உரிய நிவாரணத்தைத் தேட வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று ஷெபுஃரா ஒத்மான் வலியுறுத்தியுள்ளார்.