கோத்தா பாரு, ஏப்ரல்.11-
தகாத உறவு மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் போன்ற குற்றவியல் சம்பவங்கள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விவேகக் கைப்பேசி மோகமாகும் என்று கிளந்தான் மாநில துணை முப்தி நிக் அப்துல் காடீர் நிக் முகமட் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான சிறார்கள் தற்போது விவேகக் கைப்பேசியைக் கொண்டுள்ளனர். அதன் மோகத்தில் திளைத்திருக்கின்றனர்.
அத்துடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருக்கும் அவர்கள், தங்களுக்கு வேண்டிய குறிப்பாக தாங்கள் ஆர்வமிகுதியால் உந்தப்படுகின்ற உள்ளடக்கத்தை எளிதில் பெற்று விடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தங்கள் தாய், தந்தைக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே விவேகக் கைப்பேசியில் ஆபாசப் படங்கள் மற்றும் இதர குற்றச் செயல்களைக் கண்டு களிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
அவ்வாறு பார்க்கக்கூடிய ஒழுங்கீன நடவடிக்கைகளை நேரடியாக காணும் வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் அதுவே அவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்குவதற்கு வழிகோள்கின்றன என்று அந்த துணை முப்தி தெரிவித்தார்.
கிளந்தான் மாநிலத்தில் 11 வயது சிறுவன், 15 வயது பெண்ணைக் கர்ப்பிணியாக்கியது மற்றும் கிளந்தானில் தகாத உறவு மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக போலீஸ் துறை அறிவித்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அந்த சமய அறிஞர் மேற்கண்டவாறு கூறினார்.