கோலாலம்பூர், ஏப்ரல்.11-
மலேசியாவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் வருகையானது, இரு வழி வர்த்தகப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் என்பதுடன், பிராந்திய உறவுகளை மேம்படுத்தும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் வருகை, மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தைப் பெரியளவில் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.
மலேசியாவின் முக்கிய வர்த்தகச் சகாவாக சீனா திகழும் அதே வேளையில், இவ்வாண்டில் ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்று இருப்பதால் பிராந்திய அளவிலான ஈடுபாடுகள் குறித்து விவாதிப்பதற்கு நிறைய விவகாரங்கள் உண்டு என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரையில் மூன்று நாள் மலேசியாவிற்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் புதிய வரி காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் வெடித்து இருக்கிறது.
இந்நிலையில் சீன அதிபர் ஸி ஜின் பிங்கின் மலேசிய வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.