ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-
கடந்த வாரம் இரண்டு பெண்களை மடக்கிக் கொள்ளையிட்டதாக நபர் ஒருவர், ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
அப்துர் ராஸாக் சுப்பையா அப்துல்லா என்ற 36 வயதுடைய அந்த நபர், நீதிபதி தல்ஹா பாசோங் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 8.26 மணியளவில் கூலாய், பண்டார் புத்ரா, ஜாலான் ஶ்ரீ புத்ரா 1 இல் ஒரு கடையின் பின்புறம் 52 வயதுடைய இந்தோனேசிய மாதுவை மடக்கி அவரின் கைப்பை, கடப்பிதழ், தங்க ஆபரணங்கள், மணிபர்ஸ் உட்பட சில பொருட்களைக் கொள்ளையடித்ததாக சுப்பையா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் அதே தினத்தன்று காலை 8.45 மணியளவில் கூலாய், தாமான் இம்பியான் செனாய், ஜாலான் இம்பியான் செனாய் உத்தாமாவில் சலவைக்கடையில் 37 வயது மலேசிய மாதுவை மடக்கி, அவரின் கைப்பை, வங்கி அட்டைகள், 200 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக அந்த நபர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 392 பிரிவின் கீழ் சுப்பையா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.