ஷா ஆலாம், ஶ்ரீ மூடாவில் மீண்டும் பெரும் வெள்ளம்

ஷா ஆலாம், ஏப்ரல்.11-

இன்று அதிகாலையில் பெய்த கனத்த மழையில், ஷா ஆலாம், தாமான் ஶ்ரீ மூடாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, தீவு போல் ஆனது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுடன் கடந்த 2021 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வரலாறு காணாத வெள்ளத்தைப் போல் நிலைமை ஆகிவிடுமா? என்று மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இன்று காலையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில், நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அருகில் உள்ள ஆற்று நீர் பெருக்கெடுத்து, கால்வாய்கள் நிரம்பி, வீடுகளில் கடல் அலையைப் போல் நுழைந்ததாக ஸ்ரீ மூடா மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2 மணியிலிருந்து வெள்ளம் வீடுகளில் நுழையத் தொடங்கிய நிலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் வீடுகளின் கூரை மீது அமர்ந்திருக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

மின்சாரம் தாக்கி, ஆடவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து ஷா ஆலாம் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சிலாங்கூர், ஷா ஆலாமில் தாமான் ஶ்ரீ மூடாவிற்கு அடுத்து பெட்டாலிங், கிள்ளான், சிப்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய ஐந்து மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பொது தற்காப்புப்படையின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் காஸாலி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜாலான் பாடாங் ஜாவாவில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS