4 டத்தோக்கள் கைது – 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான ரொக்கப் பணம், சொத்துக்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

ஸ்கேம் மோசடிகள் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட மிகப் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையில், டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன் கிட்டத்தட்ட 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட்ட ஓப்ஸ் நோதர்ன் ஸ்டார் சோதனை நடவடிக்கையின் வாயிலாக 44 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 டத்தோக்களும் அடங்குவர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

அனைத்துலக போலீஸ் துறையான இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் , மிகப் பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஐஜிபி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டர்களின் 300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன என்று டான்ஶ்ரீ ரஸாருடின் விளக்கினார்.

வெளிநாட்டைத் தளமாகக் கொண்டு பெலாபுரான் எம்பிஐ வாயிலாக முதலீடு செய்யப்பட்டு சட்டவிரோதமாகக் கிடைக்கப் பெற்ற பணத்தின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள் இந்த சொத்துக்களை வாங்கியதாக நம்பப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

கைது செய்யப்பட்ட 4 டத்தோக்களில் இருவர் தொழில் அதிபர்கள் ஆவர். மற்ற இருவர், வழக்கறிஞர்கள் ஆவர் என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

மொத்தம் 116 கோடி ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கொண்ட 638 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள வேளையில் 200 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய 35 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டான்ஶ்ரீ ரஸாருடின் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS