பாலிக் பூலாவ், ஏப்ரல்.11-
பினாங்கு, பாராட் டாயா மாவட்டத்தில் போதைப் பொருளைத் தீவிரமாக விநியோகித்து வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை போலீசார் வெற்றிகரமான முறியடித்துள்ளனர்.
இரண்டு அந்நியப் பிரஜைகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டது மூலம் இந்த போதைப் பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பாராட் டாயா மற்றும் தீமோர் லாவுட் மாவட்டங்களில் போலீசார் மேற்கொண்ட இரண்டு சோதனைகளில் பினாங்கு மாநிலத்தில் போதைப் பொருளை விநியோகிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இந்த நால்வர் பிடிப்பட்டனர்.
முதல் சோதனை, காலை 11 மணிக்கு கம்போங் பெர்மாதாங் டாமார் லாவுட் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 42 வயது காதலனும், 38 வயது காதலியும் பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டாவது சோதனை பிற்பகல் 3.30 மணியளவில் குளுகோர், லெங்கொக் பெமன்சாரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு வங்காளதேச ஆடவரும், ஒரு மியன்மார் பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் பிடிபட்டது மூலம் 38 ஆயிரத்து 493 ரிங்கிட் பெறுமானமுள்ள 12.6 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.