மஇகா தலைமையகக் கட்டடத்திற்கு அருகில் உள்ள அந்த கோவில் அகற்றப்பட வேண்டும் – கும்பல் ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, ஒன்றாவது மைல், மஇகா தலைமையக கட்டடம் வீற்றிருக்கும் இடத்திற்கு அருகில் ஜாலான் ரஹ்மாட்டில் ஒரு காலி நிலத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக கோவிலுக்கு டிபிகேஎல் அனுமதி பெறவில்லை என்று கூறி, 50 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

மலேசிய இஸ்லாமிய சமூக நல அமைப்பான பெர்கிம் கட்டடம் வீற்றிருக்கும் சூராவிலிருந்து 10 மீட்டர் தொலைவில் அந்த கோவில் கட்டடம் இருப்பதாக அந்த கும்பல் கூறிக் கொண்டது.

அந்த கோவில், ஒரு தனியார் நிலத்தில் வீற்றிருந்த போதிலும், பெர்கிம் கட்டடத்தின் சூராவ் அருகில் இருப்பதால் அது முஸ்லிம்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு தலைமையேற்ற பெர்கிம் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமட் ரிடுவான் தீ அப்துல்லா தெரிவித்தார்.

அந்த கோவில் கட்டடத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் உடனடியாக அகற்ற வேண்டும் என்று கும்பல் கோரிக்கை விடுத்தது.

சூராவிற்கு நேர் எதிரே அந்த கோவில் இருப்பதால் தாங்கள் மேற்கொள்ளும் சமய நடவடிக்கைகளுக்கு அந்த கோவில் இடையூறாக இருப்பதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.

அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் அந்த கோவிலின் நிர்மாணிப்புப் பணியை உடனடியாக நிறுத்தும்படி டிபிகேஎல் பல முறை நோட்டீஸ் வழங்கியும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அந்த கோவிலைக் கட்டும் பணியைத் தொடர்ந்து கொண்டு இருப்பதாக அந்த கும்பல் கூறியது.

அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் மஇகா தலைவர்கள், நடப்புச் சட்டத்தை நன்கு உணர்ந்திருந்தும், டிபிகேஎல் அனுமதியின்றி அந்த கோவில் கட்டப்படுவதைக் கண்டும் காணாததுமாக உள்ளனர் என்று முகமட் ரிடுவான் தீ அப்துல்லா கூறினார்.

மஇகா தலைமையகக் கட்டடத்திற்கு அருகில் அந்த கோவில் நிர்மாணிப்பு கட்டம் கட்டமாக விரிவடைந்து பெரிய கோவிலாக உருமாற்றம் காண்பதற்கு முன்னதாக, அந்த கோவில் நிர்மாணிப்புப் பணி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கோவில் பெரியளவில் உருமாற்றம் காணுமானால் சமய நடவடிக்கை என்ற பெயரில் பெர்கிம் வளாகம் முன் பெரும் பக்தர்கள் பெரிய அளவில் திரளும் பட்சத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், இன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி தனியார் நிலத்தில் உள்ள அந்த கோவில் கட்டடம், அவர்களின் சொந்த நிலத்தில், சொந்த பயனீட்டுக்காகக் கட்டப்பட்டுள்ளதே தவிர பொது மக்களுக்கு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.

மஇகா கட்டட வளாகத்தில் உள்ள அந்த காலி நிலத்தில் பெரிய வர்த்தக காம்ப்லெக்ஸ் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருக்கிறது. அதன் நிர்மாணிப்புப் பணிகள் எவ்வித இடையூறின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு சிறு தெய்வ வழிபாட்டிற்காக அந்த கோயில் தற்காலிகமாகக் கட்டப்பட்டுள்ளதே தவிர அந்த கோவில் கட்டடம் அங்கு நிரந்தமாக இருக்கப் போவதில்லை என்று டிபிகேஎல் தெளிவுபடுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS