மூசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் அல்ல

குவாந்தான், ஏப்ரல்.12-

பகாங், ரவூப்பில் நேற்று முன்தினம் 200 க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம், நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் அல்ல என்று பகாங் மாநில அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

டுரியான் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது, நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று ரவூப் பகுதியில் மூசாங் கிங் டுரியான் மரங்களைப் பாதுகாக்கும் அமைப்பான SAMKA ( சாம்கா )-வின் கூற்று, ஆதாரமற்றதாகும் என்று பகாங் மாநில அரசாங்க சட்ட ஆலோசகர் டத்தோ சைபுஃல் எட்ரிஸ் ஸைனுடின் தெரிவித்தார்.

மூசாங் கிங் டுரியான் தோட்டங்களுக்குள் நுழைவதற்கு அவர்கள் செய்திருந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தாலும், அப்பீல் நீதிமன்றத்தாலும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன என்று சைபுஃல் குறிப்பிட்டார்.

எனவே மூசாங் கிங் டுரியான் மரங்கள் வீற்றிருக்கும் அந்த நிலம், சட்டப்படி பகாங் மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும் என்று அவர் விளக்கினார்.

பகாங் அரசுக்கு சொந்தமான நிலத்தின் மீதான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவே மூசாங் கிங் டுரியான் மரங்களை வெட்டி வீழ்த்த மாநில அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதில் மூசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்தை எதிர்க்கும் சாம்கா அமைப்பின் பொறுப்பாளர்கள், மேற்கொள்ளும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள பகாங் அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS