கோல லிப்பிஸ், ஏப்ரல்.12-
பகாங், கோல லிப்பிஸ் மருத்துவமனையின் சிறார் வார்ட்டில் ஒன்பது மாத இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பகாங் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலான காணொளி தொடர்பில் மாநில சுகாதாரத்துறை விரிவாக ஆராய்ந்ததில், இரட்டைக் குழந்தைகள் யாரும் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதே வேளையில் இப்படியோர் அபத்தமான குற்றச்சாட்டைத் தெரிவித்ததாகக் கூறப்படும் டாக்டர் அமலினா ஹுஸ்னா என்பவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கோல லிப்பிஸ் மருத்தவமனையில் அந்த இரட்டைக் குழந்தைகளை ஒரு தம்பதியர் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பொய்யானத் தகவலை மாநில சுகாதாரத்துறை கடுமையாகக் கருதுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.