தாப்பா, ஏப்ரல்.12-
இன்று காலையில் நடைபெற்ற பேரா, ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கையும் கேலி செய்யும் வகையில் அவர்களின் முகத் தோற்றத்தைக் கொண்ட கேலி சித்திரங்களைத் தாங்கிய படங்களைப் பயன்படுத்தி, சீண்டிப் பார்த்து இருக்கும் பெரிக்காத்தான் நேஷனலை ஜசெக, துணைத் தலைவர் ங்கா கோர் மிங் கடுமையாக சாடினார்.
இத்தகையச் செயல்கள் பொருத்தமற்றது என்பதுடன் அவர்களின் அரசியல் முதிச்சியின்மையைப் பிரதிபலிக்கிறது என்று ங்கா வர்ணித்தார்.
இவ்வாறு கேலிச் சித்திரங்கள் வாயிலாக தீய நோக்கத்துடன் சீண்டிப் பார்ப்பது, நாட்டின் தேசிய மேம்பாட்டிற்குக் கூடுதல் நன்மை எதனையும் கொண்டு வரப் போவதில்லை. மாறாக, தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தவே உதவும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்ற விரும்புகின்றவர்கள், நாட்டின் தேசியப் பிரச்னைகள், குறிப்பாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பு போர் போன்ற ஆக்ககரமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர இது போன்ற சில்லுண்டித்தனமான விவகாரங்களில் அல்ல என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.