இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறிய பல இயக்கங்களின் ஒத்துழைப்புடன் விரைவில் மாநாடு

சிரம்பான், ஏப்ரல்.12-

நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறியவும், அவற்றை ஆராயவும், விரைவில் தேசிய அளவிலாான ஒரு மாநாடு நடத்தப்படும் என்று பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் அறிவித்துள்ளார்.

இந்து ஆலயங்கள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகளுடன் நின்று விடாமல், பல பொது இயக்கங்களின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த மாநாடு சிறப்பாக நடத்தப்படும் என்று சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.

இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பல சிக்கல்கள் கலந்தாலோசிக்கப்பட்டு, தீர்வு காண்பதற்கான வழி வகைகளை ஆராயும் களமாகவும் இந்த மாநாடு அமையும் என்று சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியத்தின் முன்னெடுப்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சிரம்பான், ஜாலான் ராசாவில் அமைந்துள்ள ஆடிடோரியம் ஹொஸ்பிட்டல் மாவாரில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் இந்து ஆலயங்களை வளப்படுத்தும் கலந்தாய்வுக் கூட்டத்திற்குச் சிறப்பு வருகை புரிந்த சண்முகம் மூக்கன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஈராண்டுகளில் நாட்டில் உள்ள ஆலயங்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறை 30 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியதாக சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.

அதில் பலர் பலனடைந்த நிலையில், சிலருக்கு அதனைப் பற்றிய முன்னெச்சரிக்கை இருத்தல் அவசியமாகும். ஆலயங்கள் சார்ந்த சிக்கல்களை ஆராயவும், பிரச்னைக்குத் தீர்வு காணவும் எந்தவோர் இயக்கமும் விடுபடாமல் அனைத்து இயக்கங்களும் ஒற்றிணைத்து, அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதமர் துறை இந்த மாபெரும் மாநாட்டை ஏற்று நடத்தும் என்று சண்முகன் மூக்கன் தமது உரையில் தெரிவித்தார்.

நாம் அனைவருக்கும் சமயம் சார்ந்த சிந்தனை மாற்றம் தேவை. அதேபோன்று நமது ஆலயங்களை வளப்படுத்த அவை எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை ஆராய்வதும் அவசியமாகும் என்று சண்முகம் மூக்கன் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS