புத்ராஜெயா, ஏப்ரல்.13-
மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு தனது அனைத்து சுகாதார நிலையங்களிலும் பாதுகாப்பு குறித்து ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. பாதுகாப்பு நடைமுறைகளை மீறி மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
பாதுகாப்பு, கட்டுப்பாட்டு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம், இந்த விவகாரத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது, எனவே இந்த விவகாரம் பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.நாங்கள் பாதுகாப்பு அம்சத்தில் சமரசம் செய்ய மாட்டோம் என்று அவர் கூறினார். போலியான மருத்துவர் போல் நடித்து இரட்டைக் குழந்தைகளை ஒருவர் கடத்திச் சென்றதாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை அடுத்து டாக்டர் சுல்கிப்ளி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நேற்று, கோல லிப்பிஸ் மருத்துவமனை நிர்வாகம், போலியான மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தது. பகாங் மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், விசாரணையின் முடிவில், அந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஒன்பது மாதங்களாக இரட்டைக் குழந்தைகள் சிகிச்சை பெற்றதாக எந்தப் பதிவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.