சுபாங் ஜெயா, ஏப்ரல்.13-
புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மாபெரும் துப்புரவு பணி இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இன்று காலை 9 மணி முதல் தொடங்கிய இந்த நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டுதல், குப்பைகளை அகற்றுதல், சாலைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பணிகள் A, B, C என மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 மண்டலங்களாகச் செயல்படுத்தப்படுகின்றன. மண்டலம் Aவும் மண்டலம் Bயும் தாமான் புத்ரா ஹார்மோனி பகுதியை உள்ளடக்கியது, மண்டலம் C கம்போங் சுங்கை பாருவை உள்ளடக்கியது. நீர்த் தொட்டிகள், மண்வெட்டி இயந்திரங்கள், கிரேன்கள் போன்ற பல துப்புரவு வாகனங்கள் துப்புரவுப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இயக்கப்படும் பகுதிகளில் நுழைந்துள்ளன. இதுவரை 307 வீடுகள் மீண்டும் குடியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் மேலும் பல வீடுகள் விரைவில் குடியிருப்புக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.